search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் விசாரணை"

    • வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மாத்திரைகள், பீடி இலைகள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

    மேலம் இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சட்ட விரோதமாக கடத்தல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் மறித்தனர். உடனே அதில் இருந்த டிரைவர் உள்பட சிலர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அதனையும், கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்து தப்பியோடிய நபர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, பவானிசாகர் சாலை உள்ளி ட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இவற்றில் கோவை சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

    நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வல்லரசுவின் செல்போன் கடையின் மேற்கூரை திடீரென இடி ந்து விழுந்தது. உடனே வல்லரசு மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் கடையை விட்டு வெளியேறினர்.

    பின்னர் கடையின் மேற்கூரை கான்கிரீட் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில் விற்பனைக்காக வைத்திருந்த புதிய செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் முழுமையாக சேதம் அடைந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
    • தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டி ருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி தன் பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப்படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீ சார் வெளியிட்டுள்ளனர்.

    போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணியன் பாலச்சந்தர் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை யினர் புகைப் படத்தை அடிப்படையாகக் கொண்டு 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    மேலும் புகைப்படத்தில் உள்ள நபர்களை யாரேனும் பார்த்தால் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பாரத ஸ்டேட் வங்கி. சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் இதில் வங்கி கணக்குகள் வைத்துள்ளன.
    • சேதாரத்தின் மதிப்பு குறித்து வங்கி உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும்.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சிட்கோ பகுதியில் அமைந்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் இதில் வங்கி கணக்குகள் வைத்துள்ளன. அது மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும் சேமிப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.

    எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வங்கி இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வங்கிக்குள் புகை வருவதை கண்ட வாட்ச்மேன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் துவாக்குடி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திரு வெறும்பூர், பெல், நவல்பட்டு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

    இதில் வங்கியிலிருந்து அனைத்து கம்ப்யூட்டர்களும் எரிந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர் பிரசாந்த் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சேதாரத்தின் மதிப்பு குறித்து வங்கி உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரிய வரவும் ஒவ்வொருத்தரும் தங்களது கணக்கின் நிலை தங்கள் நகை அடகு வைத்ததுடன் நிலை கண்டு அச்சம் தெரிவித்துள்ளனர். 

    • திடீரென பிரேக் போட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த அரசு பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    சென்னையில் இருந்து அரியலூருக்கு அரசு பஸ் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதனை டிரைவர் பிரதீஸ்வரன்(42) ஓட்டி வந்தார்.

    திண்டிவனம் அருகே சாரம் பாஞ்சாலம் ஜங்ஷன் அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த அரசு பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அரசு பஸ் டிரைவர் பிரதீஸ்வரன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 17-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுபவிக்கப்பட்டனர்.

    இதில் 9-க்கும் மேற்பட்டோர் சென்னை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.
    • சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மீன் மார்க்கெட் அருகே ஓடை செல்கிறது.

    அதன் அருகே இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் ரத்த கரையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி. ஜெய்சிங், சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு ஓடை பகுதியில் ஒரு சிலர் மது அருந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வட மாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது. இதேபோல் இடது கை மற்றும் இடது கண்ணிலும் ரத்த காயங்கள் இருந்தன.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.

    இதில் மது அருந்தும் போது அவர்களுக்குள் சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். எனவே போலீசார் இரவு நேரங்களில் இந்த பகுதியில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்றனர்.

    இந்நிலையில் இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம ஆசாமிகள் வந்த காரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
    • கடலூரில் இருந்து 2 போலீஸ் மோப்ப நாய்கள் கூப்பர், வெற்றி வரவழைக்கப்பட்டது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் சென்னை சாலை பூங்குணம் ஏரிக்கரை பகுதியில் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்,போக்குவரத்து போலீஸ்காரர் கார்த்தி ஆகியோர் நேற்று பிற்பகல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரித்தனர்.காரில் கட்டு கட்டாக பணம், நகை இருந்தது தெரியவந்தது. காரின் சாவியை போலீசார் எடுத்தனர். இதனால் ஆத்திரமடை ந்த காரில் வந்த 3 பேர் போலீசாரிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கத்தியால் போலீசாரை தாக்கமுயன்றனர்.அதிர்ஷ்டவசமாக அவர்களின் கொலை வெறி தாக்குதலில் இருந்து போலீசார் காயம் இன்றி தப்பினார். பின்னர் கண்ணிமை க்கும் நேரத்தில் காரில் இருந்த பணம் நகைகளை வாரி சுருட்டிக்கொண்டு ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடித்தனர்.வாகன சோதனையில் இருந்தபோக்குவரத்துபோலீசாரை தாக்கம் முயன்றுகொலை மிரட்டல் விடுத்து 3 பேர் தப்பிய தகவல் அந்த பகுதியில்காட்டுத்தீ போல பரவியது.

    தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுபழனி இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பரமேஸ்வர பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, எழில்தாசன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுமர்ம ஆசாமிகள்வந்த காரை பறிமுதல்செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர் . மேலும் கடலூரில் இருந்து 2 போலீஸ் மோப்ப நாய்கள் கூப்பர், வெற்றி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு சித்திரச்சாவடி, கணிசப்பாக்கம், வி.ஆண்டி குப்பம் வழியாக பண்ருட்டிக்கு ஓடி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    போக்குவரத்து போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய ஓடிய மர்ம ஆசாமிகள் வந்த காருக்கு 4 நம்பர் பிளேட் இருந்தது. காரின் நம்பர் போலி எனவும், மர்ம நபர்கள் திருச்சி, திண்டுக்கல் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சென்னைக்கு செல்ல பண்ருட்டி வழியாக வந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உலர் பழங்களை ஆர்டர் செய்தபோதும், பாலிசி எடுத்து தருவதாக கூறியும் ரூ.2½ லட்சம் சுருட்டல்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் வயதான முதியவர்களை குறி வைத்து ஆன்லைன் வாயிலாக 2 பேரிடம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜெ.எல்.என். சர்மா என்பவரிடம் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர் தனியார் வங்கி யின் இன்சூரன்ஸ் நிறுவனத் தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். நீங்கள் செலுத்தும் பாலிசி தொகை 45 நாட்களில் திருப்பி தரப்படும் என்று அவர் ஆசை காட்டியுள்ளார்.

    இதனை நம்பி சர்மா, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் மறுநாள் மனைவியின் வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சம் பணத்தை அனுப்பி வைத்து உள்ளார்.

    இதைத்தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி எதுவும் நாங்கள் பேசவில்லையே? ஏன் பணத்தை அனுப்பினீர்கள்? என்று கேட்டுள்ளனர்.

    இதன்பிறகே சர்மா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதுபற்றி சூளைமேடு போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 70 வயதான ஜெயஸ்ரீ என்பவர் ஆன்லைனில் உலர் பழங்களை ஆர்டர் செய்துள்ளார்.

    ஆனால் ஆர்டர் செய்ய முடியாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீ பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டில் இருந்து 6 முறை தலா ரூ.10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரும் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி போலீசார் கூறும்போது, "அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினால் அவர்களிடம் எச்சரிக்கையோடு பேச வேண்டும். இல்லையென்றால் இதுபோன்று இழப்புகளை சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளனர்.

    • பறிமுதல் செய்யப்பட்ட போதை ஸ்டாம்ப்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.
    • போதை ஸ்டாம்ப் சப்ளை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் 'ஸ்டாம்ப்' வடிவிலான போதைப் பொருள் புதுச்சேரி தாகூர் நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், தாகூர் நகரை சேர்ந்த இசை கலைஞர் சுசீந்திரன் (வயது 28) என்பதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எல்.எஸ்.டி. எனப்படும் போதை 'ஸ்டாம்ப்' விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சுசீந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 போதை 'ஸ்டாம்ப்'கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சென்னையை சேர்ந்த ஆஷிக் (23) என்பவரிடம் இருந்து போதை ஸ்டாம்பை வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ஆஷிக்கை கைது செய்து விசாரித்த போது, அவரது நண்பர் சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சந்தோஷ்(22) என்பவரிடம் இருந்து வாங்கியதாக கூறினார்.

    உடனே போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று, அவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் 2 பேரிடம் இருந்து 13 போதை ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

    மருத்துவ மாணவர் ஆஷிக், டி.ஜே . நிகழ்ச்சியை பார்க்க செல்லும் போது சுசீந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது சுசீந்திரன் தனக்கு போதை ஸ்டாம்ப் வேண்டும் என்று ஆஷிக்கிடம் கேட்டுள்ளார்.

    அவர் தனது நண்பர் சந்தோசின், கல்லூரியில் படிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் அதனை பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.

    இதற்கிடையே சந்தோஷ் தனது நண்பர் ஆஷிக்கை பார்ப்பதற்காக புதுச்சேரி வந்தார். அப்போது இவர்கள் 3 பேரும் சந்தித்து பேசினர்.

    பின்னர் காரில் சென்னை சென்று அங்கிருந்து 20 போதை ஸ்டாம்ப்களை வாங்கி புதுச்சேரி வந்தனர். அதில் 7-ஐ சுசீந்திரனிடம் கொடுத்தனர்.

    மேலும் 13 போதை ஸ்டாம்புகளை அவர்கள் பயன்படுத்த வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதை ஸ்டாம்ப்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    இவர்களுக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூட நம்பிக்கையால் இது போன்ற சம்பவங்கள் கூட்டுக் கரீம் நகர் மாவட்டத்தில் அரங்கேரி வருவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்
    • எலும்புகளை திருடி செல்லும் சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் சுல்தானாபாத்தில் சுடுகாடு உள்ளது. இங்கு எரிக்கப்படும் பிணங்களில் இருந்து மண்டை ஓடு,எலும்புகளை சிலர் திருடி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் பிணங்களை எரிக்கும் உறவினர்கள் அவர்களது அஸ்தியை கரைப்பதற்காக மீண்டும் சுடுகாட்டிற்கு வந்து பார்க்கும் போது எலும்புகள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை 2 வாலிபர்கள் பைக்கில் சுடுகாட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த பையில் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட பிணங்களில் இருந்து எலும்புகளை சேகரித்து பைகளில் எடுத்துச் செல்ல முயன்றனர். அப்பகுதியில் இருந்த மக்கள் இதனைக் கண்டு வாலிபர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜ்குமார் வினோத்குமார் என தெரிய வந்தது.

    அதேபோல் நேற்று முன்தினம் 2 பெண்கள் சுடுகாட்டில் இருந்த எலும்புகளை சேகரித்து எடுத்துச் செல்ல முயன்றனர் இதனைக் கண்ட நகராட்சி ஊழியர்கள் 2 பெண்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட 4 பேரிடமும் எலும்புகளை எதற்காக தேடி செல்கிறார்கள்.

    மாய மந்திரம் மாந்திரீகம் செய்ய திருடி செல்கிறார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மூட நம்பிக்கையால் இது போன்ற சம்பவங்கள் கூட்டுக் கரீம் நகர் மாவட்டத்தில் அரங்கேரி வருவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்

    வழிபாடு, மாய மந்திரம், பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை பார்த்து கேட்டு இருக்கிறோம். ஆனால் எரிக்கப்பட்ட பிண்ங்களிலிருந்து மண்டை ஓடு, எலும்புகளை திருடி செல்லும் சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    ஊட்டி:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ. இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் அடுத்த காந்தி நகரில் கடந்த 6 மாதங்களாக புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    தற்போது அங்கு தடுப்பு சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக அருகே உள்ள நகராட்சி கழிப்பறையையொட்டி 30 அடிக்கு மண்ணை வெட்டி எடுத்தனர். இதனால் கழிப்பறை அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இதனை யாரும் பொருட்படுத்தவிலை.

    நேற்று இங்கு பெண்கள் உள்பட 17 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். காலையில் பணியாளர்கள் அனைவரும் பணி நடந்த இடத்தின் அருகிலேயே அமர்ந்து டீ குடித்தனர்.

    அப்போது அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த கழிப்பறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அத்துடன் மண்சரிவும் ஏற்பட்டது. இதை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர்.

    இருந்த போதிலும் 12 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் மேல்காந்தி நகரை சேர்ந்த சகீலா (வயது30), பாக்கியலட்சுமி(42), சங்கீதா(35), ராதா(38), மேல் தலையாட்டு மந்துவை சேர்ந்த உமா(35), முத்து லட்சுமி ஆகிய 6 பேர் பிணமாகவே மீட்கப்பட்டனர்.வண்ணாரப்பேட் டையை சேர்ந்த நந்தகுமார்(25), கவுதம்(24), மகேஷ்(23), தாமஸ் (25), ஜெயந்தி (55), சாந்தி (45) ஆகிய 6 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் திரண்டனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பவ இடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஊட்டி லவ்டேல் போலீசார் கட்டி உரிமையாளர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேற்பார்வையாளர்கள் ஜாகீர் அகமது, ஆனந்தராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது அவர்கள் 4 பேரையும் வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவி னர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டது.

    ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது.

    இதையடுத்து நள்ளிரவில் ஊட்டி தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. மகராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், தாசில்தார் சரவணன் ஆகியோர் இறந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையின் முடிவில் உறவினர்கள், இறந்த 6 பேரின் உடலை வாங்கி கொள்வதாக தெரிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இன்று காலை இறந்த 6 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே இங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த அளவை மீறி கட்டப்பட்டுள்ளதும், அதிக சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    • நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் துரித நடவடிக்கை எடுத்த போதிலும், அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் அரங்கேறத்தான் செய்கிறது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல் லாணியை அடுத்த பெரிய பட்டினம் புதுமடம் புதுக்குடியிருப்பு கடற்கரை தென் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கடலோர காவல் படையினர் மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் அந்தோணி சகாய சேகர் மற்றும் போலீசார் பெரிய பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பதிவு செய்யப்படாத இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பெரியபட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த முஹம்மது மீராசா (வயது 42) என்று தெரியவந்தது. மேலும் அந்த படகை சோதனை செய்த போது அதில், சுமார் 12 பண்டல்களில் 6,84,600 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து முஹம்மது மீராசாவை கைது செய்த போலீசார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    ×